.

.

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு சிந்திக்கத் தூண்டும் கிண்ணியாவின் கல்விநிலை


இவ்வாண்டு நடைபெற்ற ஐந்தாம்தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றுப் பகுப்பாய்வினை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கிண்ணியா வலயத்தின் பெறுபேற்று மட்டம் மிகவும் கீழ்நிலையில் உள்ளது. இது கிண்ணியாவின் கல்வி நிலை குறித்து சித்திக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களுள் கிண்ணியாவும் ஒன்று. கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை என மூன்று கல்விக் கோட்டங்கள் இதன் கீழ் வருகின்றன.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த அல் புர்க்கான் வித்தியாலயமும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் 21 பாடசாலைகளுமாக மொத்தம் 22 பாடசாலைகள் கிண்ணியாக் கோட்டத்தின் கீழ் வருகின்றன. கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் ஏனைய 29 பாடசாலைகள் குறிஞ்சாக்கேணிக் கோட்டத்தின் கீழ் வருகின்றன.
அவ்வாறே தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 15 பாடசாலைகள் முள்ளிப்பொத்தானைக் கோட்டத்தின் கீழ் வருகின்றன. இதன்படி, மொத்தம் 66 பாடசாலைகள் கிண்ணியா கல்வி வலயத்தின் கீழ் உள்ளன. 25,372 மாணவர்கள் இவ்வலயப் பாடசாலைகளில் கல்வி கற்பதுடன் 1221 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
கிண்ணியா கல்வி வலயத்திலிருந்து இவ்வாண்டு 1801 மாணவர்கள் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 75 பேர் மட்டுமே வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். இது 4.16 வீதமாகும்.
ஒரு வினாத்தாளில் குறைந்தது 35 புள்ளிகள் வீதம் இரண்டு வினாத்தாள்களிலும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 766 ஆகும். இது 42.53 வீதமாகும். இதன்படி, 1035 பேர் இரண்டு வினாத்தாள்களிலும் 70 புள்ளிகளுக்கு குறைவாகவே பெற்றுள்ளனர். இது 57.47 வீதமாகும். இந்தப் பகுப்பாய்வின்படி இலங்கையிலுள்ள 98 கல்வி வலயங்களில் கிண்ணியா கடைசி நிலையில் உள்ளது.
கிண்ணியா கல்வி வலயத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டோர் சாதாரண சித்தியைக் கூட பெறமுடியாத அளவுக்கு கல்வி மட்டம் கீழ் நிலையில் உள்ளது. இது சாதாரண விடயமல்ல அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
சாதாரண சித்தியைக் கூட பெற முடியாத அளவுக்கு அரைவாசிக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த வலயத்தில் இருக்கின்றனர் என்றால் இவர்களுக்காக கடந்த 5 வருட காலத்தில் அரசு செலவு செய்த நிதிக்கு கிடைத்த பலன் என்ன, இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் செயற்பாடுகளில் ஏதும் குறைபாடுகள் உள்ளனவா, பாடசாலை உள்ளக மேற்பார்வை, கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் குறைபாடுகள் உள்ளனவா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
மாணவர்கள் இந்தளவுக்கு கீழ்மட்ட பெறுபேற்றைப் பெற்றுள்ளார்கள் என்றால் இதற்குப் பிரதான காரணமாக இருப்பதை உடன் கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்கள் மேற்கோள்ளப்படல் வேண்டும்.
கிண்ணியாவின் கல்வியை சீர்படுத்த வேண்டுமாயின் பின்வரும் விடயங்களில் உடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
1. நியாயமான அரசியல் தலையீடு
கல்வியில் அரசியல் தலையீடுகள் பல சந்தர்ப்பங்களில் பாதக நிலையைத் தோற்றுவித்து விடுகின்றன. அதாவது, ஓர் ஆசிரிய வெற்றிடம் ஏற்படும்போது அந்த வெற்றிடத்திற்கு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நியமிக்கப்படுபவர் வினைத்திறன் குறைந்தவராக இருப்பின் அந்த ஆசிரியருக்குரிய கடமைகள் அப்படியே பாழ்பட்டுப் போகின்றன.
அடுத்தது, சிரேஷ்டமானவர் இருந்து கனிஷ்டமானவருக்கு அவ்விடம் வழங்கப்படும்போது சிரேஷ்டத் தன்மையுள்ளவர்களின் ஒத்துழைப்பு மாணவர்களுக்கு இல்லாமல் போகின்றது. கனிஷ்டமானவர் சிரேஷ்டமானவரை பணிக்கவும் முடியாத நிலையில் சீர்குலைந்த நிர்வாகம் அங்கு செயற்படுகின்றது. இது கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை அரசியல் தலையீடு என்பது எல்லா ஆட்சிக் காலத்திலும் உள்ளதுதான். கட்சிக்காரரைத்தான் நியமிக்க வேண்டுமென்றால் திறமையுள்ள சிரேஷ்டத் தன்மையுள்ளவரை நியமிக்க முயற்சிக்கலாம். இது கல்வியில் பாதக நிலையைத் தோற்றுவிக்காது.
2. மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நியாயமான செயற்பாடு
ஒரு வெற்றிடம் ஏற்படப்போகும் விடயம் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு முன் கூட்டியே தெரிய வரும். எனவே, அவ்வாறான வெற்றிடத்தை நிரப்ப உரிய முறைப்படி விண்ணப்பம் கோரும் நடைமுறையை மாகாணக் கல்வித் திணைக்களம் நடைமுறைப்படுத்தினால் பல பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் தரம் பெற்றவர்கள் இருக்கும்போது அதிபர் தரமில்லாதவர்களை அதிபர்களாக நியமிக்கும் நடைமுறையை மாகாணக் கல்வித் திணைக்களம் அமுல்படுத்துவதால் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ளன. இது கல்வி நடவடிக்கையை பாதிக்கின்றது.
இதேபோல, கிண்ணியா வலயப் பாடசாலைகளுக்கு நியமித்த பலரை மாகாணக் கல்வித் திணைக்களம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் மாகாணக் கல்வித் திணைக்களம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
3. கல்வி அதிகாரிகளின் நியாயமான செயற்பாடு
கலவி அதிகாரிகள் தங்களது மேற்பார்வைக் கடமைகளை சரியாகச் செய்ய முயற்சிக்க வேண்டும். கடமையில் தவறுவிடும் அதிபர், ஆசிரியர்கள் விடயத்தில் இவர்கள் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
4. அதிபர்களின் நியாயமான செயற்பாடு
அதிபர்கள் முறையான உள்ளக மேற்பார்வையை கிரமமாகச் செய்து வரும்போது அதிக குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். பல பாடசாலைகளில் வினைத்திறனான உள்ளக மேற்பார்வை இல்லை. இதனை அமுல்படுத்த வேண்டும்.
5. ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடு
ஆசிரியர்கள் தமது கடமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். தான் பெறுகின்ற ஊதியத்திற்கு தகுந்த சேவையை வழங்குகின்றறேனா என்று ஒவ்வோர் ஆசிரியரும் தன்னை சுய விசாரணை செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாதவிடத்து மாணவர்களை முன்னேற்றமடையச் செய்ய முடியாது.
6. பெற்றோரின் செயற்பாடு
அதிகமான பெற்றோர் ஐந்தாம் தரத்தில் கல்வி பயில்கின்ற தமது பிள்ளைகளுக்கு வழிகாட்டக் கூடிய அச் சூழ் நிலையிலும் பொடுபோக்காக இருப்பதனால் பிள்ளைகளின் அடைவு மட்டம் குறைத்து விடுகின்றது. அதிகமான பெற்றோர் கூட பிள்ளை பாடசாலைக்கு செல்கிறது, பின்னேர வகுப்புக்குச் செல்கின்றது என்ற அளவோடு மட்டும் தமது செயற்பாடுகளை முடக்கிக் கொள்கின்றனர்.இந்த நிலையை மாற்றி பெற்றோரின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
7. பாடசாலைச் சமூகத்தின் செயற்பாடு
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், சூழவுள்ள சமூக நல அமைப்புகள் முதலான பாடசாலைச் சமூகம் மாணவர் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகவே கிண்ணியாவின் கல்வி மட்டத்தை மேம்படுத்த முடியும். இது கூட்டுப் பொறுப்பு. கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரும் ஏனையோரும் இந்த விடயங்களை முன்னெடுத்தால் மிக விரைவில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.
Share on Google Plus

About Admin

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Play Sultan Casino | Online Slot Games | Shootercasino
    Play a wide range of slot machines 제왕 카지노 for free online here at Shootercasino. Get the 샌즈카지노 latest online casino bonuses, free spins, 메리트 카지노 고객센터 and more!

    ReplyDelete